தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே பொது மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

Published On 2024-01-06 16:38 IST   |   Update On 2024-01-06 16:38:00 IST
  • சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.
  • ரெயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் சுக்குபாறை தேரிவிளை மற்றும் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகன்பற்று ஆகிய இடங்களில் ரெயில்வே கீழ்பாலம் (சுரங்க பாதை) அமைக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையில் ரெயில்வே கேட் LC18 அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. மேலும் இந்த வழியாக செல்லும் ரெயில் தடம், இரட்டிப்பு பாதை பணிகள் காரணமாக உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.

ஆகவே போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கும் இந்த பகுதியில் ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும். அது போன்று கொட்டாரம் அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகப்பற்றில்; உள்ள ரெயில்வே கேட் LC16 சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதால் இங்கும் ஒரு ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் நெடுநாட்களாக கிடப்பில் கிடக்கும் கோரிக்கையான கொரோனா காலத்திற்கு முன்பிருந்த ரெயில் நிறுத்தங்களில் மீண்டும் ரெயில்களை நிறுத்த வேண்டும் எனவும், கன்னியாகுமரி திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் (குழித்துறை) அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News