வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் மீட்ட காட்சி.
தரைபாலத்தை மோட்டார் சைக்கிளுடன் கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் சிக்கினார்
- கடந்த மூன்று நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வெள்ளநீர் வெளியேறி வருகின்றது.
- அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தரைபாலத்தை கடக்க முற்பட்டார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வெள்ளநீர் வெளியேறி வருகின்றது. இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத அளவுக்கு ஆர்ப்பரித்து சென்று கொண்டுள்ளது.
இதனால் இன்று காலை வெள்ளி திருப்பூரில் இருந்து அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தரைபாலத்தை கடக்க முற்பட்டார். அப்போது பாதி வழியில் வரும் பொழுது வெள்ளத்தின் வேகம் அதிகரித்ததால் அவரால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலியாக கைகோர்த்து அந்த வாகனத்தில் வந்தவரை மீட்டு அவருடைய இருசக்கர வாகனத்தையும் மீட்டு அழைத்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.