தமிழ்நாடு செய்திகள்

பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு- லாரிகள் மூலம் வழங்க கோரிக்கை

Published On 2022-09-12 12:23 IST   |   Update On 2022-09-12 12:23:00 IST
  • மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் உள்ளது.
  • நெம்மேலி குடிநீர் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் உள்ளது. இங்கிருந்து சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த 2 மண்டலங்களுக்கும் ஒரு நாளைக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 38 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

இதில் 28 மில்லியன் லிட்டர் நெம்மேலியில் இருந்தும், 10 மில்லியன் லிட்டர் வீராணம் தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நெம்மேலி குடிநீர் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக பொது மக்கள் கூறும்போது, "கடந்த 6 வாரமாகவே நெம்மேலி குடிநீர் ஆலை பராமரிப்புக்காக அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமான நாட்களில் கூட தண்ணீர் அழுத்தம் மற்றும் வினியோகம் மோசமாக உள்ளது. மெட்ரோ வாட்டர் டேங்கர் லாரிகளை முன்பதிவு செய்தாலும் தண்ணீர் வழங்க 2 நாட்கள் ஆகிறது. தற்போது தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகளையே நம்பி உள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்த ஆலையில் தற்போது கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் ஆலை கட்டப்படுகிறது. இது தயாரானதும் குடிநீர் விநியோகம் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தற்போதைக்கு தற்காலிக நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

Similar News