தமிழ்நாடு செய்திகள்

கவர்னரை மாற்றாவிட்டால் தீக்குளித்து சாவேன்- தி.மு.க. நிர்வாகி தற்கொலை மிரட்டல்

Published On 2023-06-20 13:15 IST   |   Update On 2023-06-20 16:52:00 IST
  • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
  • தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பதாக கூறிவரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கவர்னரை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு இடையூறாக உள்ள கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. நிர்வாகி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர் நலச்சங்க தலைவரும், தி.மு.க. தொழிற்சங்க தலைவராகவும் இருப்பவர் மானகிரி கணேசன். இவர் பெயரில் கவர்னரை மாற்றவேண்டும் என நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகள் கடைகோடி மக்கள் வரை சேர வேண்டும் என விரும்பி செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். அவரை வருகிற 27-ந் தேதிக்குள் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் 28-ந்தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலையின் முன்பு தீக்குளித்து சாவேன்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News