தமிழ்நாடு

'ஜெய்பீம்' படத்தின் உண்மை சம்பவ வழக்கு- உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Published On 2024-04-20 10:09 GMT   |   Update On 2024-04-20 10:09 GMT
  • ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
  • கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி ‘ஜெய்பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். இங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் 1993-ம் ஆண்டு நெல் அறுவடைப் பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்று வந்த நிலையில், கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதனை கிராமத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளனர்.

ராஜாகண்ணு என்பவரை கைது செய்த போலீசார் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். காவல்நிலையம் சென்ற ராஜாகண்ணுவின் மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அங்கிருந்து மிரட்டி போலீசார் அனுப்பிய நிலையில், மறுநாள் ராஜாகண்ணு தப்பித்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்த நிலையில் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க முடியாததால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலமும் வழங்க உத்தரவிடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஜாகண்ணு காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பொய் சாட்சி கூறிய மருத்துவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக்கோரி ராஜாகண்ணுவின் உறவினர் தொடர்ந்த வழக்கில், போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1993-ல் கடலூர் கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி 'ஜெய்பீம்' திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News