- ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
- மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (வயது49). தொழிலாளி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மாதவரம் ரவுண்டனா அருகே அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மாதவரம் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.
இதேபோல் ஜூன் மாதம் 3-ந் தேதி நள்ளிரவு ரெட்டேரி பாலம் அருகே மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து முனியசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கையின் போது அவர் சைக்கோபோல் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க பொன்னேரி விரைவு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனையின்படி மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் முனியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.