குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கண்காணிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. இன்று மாவட்ட முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததையடுத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மயிலாடி பகுதியில் நேற்று இரவு கொட்டிய மழை இன்று காலை வரை நீடித்தது. அங்கு அதிகபட்சமாக 64.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சுருளோடு, தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, கோழிபோர்விளை, கன்னிமார், கொட்டாரம், முள்ளங் கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவிப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வரும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
மழை நீடிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீரை திறக்கவும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்பு ஏற்பட்டால் கரையோர பகுதி மக்கள் தங்க வைக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள் சமுதாய நலக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.50 அடியாக இருந்தது. அணைக்கு 418 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 174 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.78 அடியாக உள்ளது. அணைக்கு 539 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகிறது.
பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஏற்கனவே பல்வேறு இடங்களில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் நடவு பணி நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், பூதப்பாண்டி, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடவு செய்யப்பட்ட பகுதிகளில் உரம் மிடுதல் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். தொடர் மழையினால் தடிகாரகோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 2.2, பெருஞ்சாணி 36, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-16.6, பூதப்பாண்டி 7.2, களியல் 30.4, கன்னிமார் 8.2, கொட்டாரம் 22.2, குழித்துறை 30, மயிலாடி 64.2, நாகர்கோவில் 10.2, புத்தன் அணை 29.8, சுருளோடு 39.4, தக்கலை 19.2, குளச்சல் 22.6, இரணியல் 42, பாலமோர் 41.6, மாம்பழத்துறையாறு 16, திற்பரப்பு 30.5, ஆரல் வாய்மொழி 3.1, கோழிப்போர்விளை 35, அடையாமடை 4.2, குருந்தன்கோடு 7.2, முள்ளங்கினாவிளை 52.6, ஆணைக்கிடங்கு 15.2, முக்கடல் 17.