தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் சொல்வதே இறுதி தீர்ப்பு- ஓ.பி.எஸ்.ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

Published On 2022-09-02 09:41 GMT   |   Update On 2022-09-02 09:41 GMT
  • கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான்.
  • அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

கோவை:

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியதாவது:-

நமக்குள் இருக்கிற பிரச்சினைகளை பேசி தீர்க்கவே நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் சொல்வது தான் இறுதி தீர்ப்பு. தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இன்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 4½ ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துவதற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஆதரவு அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும் சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உங்களை தேர்ந்தெடுத்தாரே அதற்கு நீங்கள் கொடுக்கும் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.

கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

அ.தி.மு.க.வில் 28 ஆண்டுகள் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவர் இருந்த இடத்தில் வேறு யாரும் இனி இருக்க கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

6 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டுவிட்டு, இப்பொழுது திடீரென 2 மாதத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறீர்களே இது நியாயம் தானா?

ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் அமரமாட்டோம் என்று சொல்லியதன் காரணமாகவே சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினோம்.

அப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்து விட்டு, நீங்கள் ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம். இது ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ்.பக்கம் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News