தமிழ்நாடு

மதுராந்தகத்தில் சீட்டு பணம் தகராறில் நகைக்கடைக்குள் புகுந்து வியாபாரி மீது தாக்குதல்

Published On 2023-09-01 07:07 GMT   |   Update On 2023-09-01 07:07 GMT
  • ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
  • மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மதுராந்தகம்:

மதுராந்தகம் ரங்கன் தெருவை சேர்ந்தவர் பதம்சந்த் (60).அதே பகுதியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் மதுராந்தகம் மண்டபத் தெரு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்திய ஏலச்சீட்டில் பணம் கட்டிவந்தார்.

ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பலர் பணம் சரிவரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதில் நகைக் கடை உரிமையாளர் பதம்சந்த்தும் ஏலச்சீட்டு பாக்கித்தொகை செலுத்த வேண்டும் என்று ஆனந்தின் சகோதரர் பாபு, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறி வந்தனர். ஆனால் பதம்சந்த் ஏலச்சீட்டு பணம் முழுவதும் தான் கட்டிவிட்டதாக கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபு ஆகியோர் ஏலச்சீட்டு பணம் தொடர்பாக நகைக்கடையில் இருந்த பதம்சந்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நகைக்கடை உரிமையாளரை தாக்கும் காட்சி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபுவை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News