தமிழ்நாடு

கோவையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2023-09-15 07:09 GMT   |   Update On 2023-09-15 07:09 GMT
  • கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
  • வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

வடவள்ளி:

கோவை அருகே உள்ள வடவள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை 11 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கார்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

இதேபோல இந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின் போது அதிகாரிகள் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன? அதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு?, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் எப்படி வந்தது? வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வீடுகள் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? அதற்கு வருமானவரி செலுத்தப்பட்டு உள்ளதா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டனர். மேலும் கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சில முக்கிய ஆதாரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை 14 மணி நேரம் நடந்தது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் வெளியே செல்ல முடியாத படியும், யாரும் உள்ளே வர முடியாத படியும் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு சென்றனர்.

இன்று 2-வது நாளாக காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனத்தில் தலைமை அலுவலகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News