தமிழ்நாடு

செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த வீட்டை படத்தில் காணலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Published On 2023-05-26 05:00 GMT   |   Update On 2023-05-26 05:00 GMT
  • தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
  • தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை:

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிருந்தே கோவை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பணிகளையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் இந்த சோதனையானது நடந்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்தது. கோவை கோல்டு வீன்ஸ் பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை இவரது வீட்டிற்கு 2 கார்களில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் நுழைவு வாயிலை பூட்டி விட்டு உள்ளே சென்றனர்.

வீட்டிற்குள் சென்றதும் அங்கிருந்தவர்களின் செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள் மற்றவர்கள் வரவும் அனுமதிக்கப்படவில்லை.

10 பேர் கொண்ட அதிகாரிகள் செந்தில் கார்த்திகேயனின் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் எடுத்து பார்த்து ஆய்வு செய்தனர்.

வீட்டின் அருகே உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. செந்தில் கார்த்திகேயன் அ.தி.மு.கவில் இருந்து விலகி சமீபத்தில் தான் தி.மு.க.வில் இணைந்தார்.

செந்தில் கார்த்திகேயன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அறிந்ததும் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வீட்டின் முன்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று காளப்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கு 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பணி வழங்குவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் கவர்னரை சந்தித்து செந்தில் பாலாஜி பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக புகார் மனு அளித்ததுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தான் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இருப்பினும் சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றுள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையானது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News