தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-02-21 12:52 IST   |   Update On 2023-02-21 12:52:00 IST
  • மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
  • மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்போரூர்:

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீட்டர் தூரத்துக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கந்தன் சாவடி முதல் கண்ணகி நகர் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணகி நகர் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. 5 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒரு மணிநேரம் வரை ஆனது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மெட்ரோ ரெயில் பணியால் ஓ.எம்.ஆர். சாலையில் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதே கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

Similar News