தமிழ்நாடு

கோப்புப்படம்

திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்: 2,700 பஸ்கள், சிறப்பு ரெயில் இயக்கம் தொடங்கியது

Published On 2023-11-25 05:00 GMT   |   Update On 2023-11-25 05:00 GMT
  • பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
  • போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் நாளை ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி இன்று மற்றும் நாளையும் சென்னையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது.

பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர் அந்த ரெயில் 2 நாட்கள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இன்று மற்றும் நாளையும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர் பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சிபுரம், பெங்களூரு, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து வருகின்றனர்.

நகரில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுத்தம் செய்யப்பட்டு பளிச்சிடுகிறது.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த நகருக்குள் வரும் 9 சாலைகளிலும் பார்க்கிங் மையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் 85 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் எங்கும் அரோகரா கோஷம் என்ற மந்திரங்கள் பக்தர்களிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆன்மிக நகரம் பக்தி பரவசமாக காட்சி தருகிறது.

Tags:    

Similar News