தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா- கவர்னர் ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

Published On 2023-03-25 10:05 GMT   |   Update On 2023-03-25 10:05 GMT
  • அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
  • மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை:

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனாலும் அந்த விளக்கங்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டசபையில் நேற்று முன்தினம் கவர்னர் திருப்பி அனுப்பி இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அவை முன்பு வைக்கப்பட்டது.

இந்த தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) உள்பட சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டி சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. சட்டத்துறையில் நேற்று காலை இந்த மசோதாவின் அனைத்து பக்கங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. சட்ட விதிகள் அனைத்தும் முறையாக தெளிவுபடுத்தப்பட்டு இருந்ததால் சட்டத்துறையும் நேற்றே கவர்னருக்கு அனுப்ப அனுமதித்தது.

இதைத்தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 6 மணி அளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிகாரிகளிடம் வழங்கி விட்டு வந்தனர். தமிழக சட்டசபையில் ஒரு சட்டம் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். பம்மலில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., "கவர்னர் இனி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்து போட்டே தீர வேண்டும்" என்றார்.

அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கையெழுத்து போட மறுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்டதாக தெரிகிறது. சட்ட நிபுணர்களிடமும் இது தொடர்பாக ஆலோசித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி சென்னை திரும்பினார். இன்று காலை அவரிடம் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து அந்த ஆவணங்களை கவர்னர் ரவி ஆய்வு செய்தார். சட்ட நிபுணர்களிடம் அவற்றை வழங்கி கருத்துக்கள் கேட்டு உள்ளார். ஏற்கனவே கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு புதிய மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.

இவை அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசிய பிறகு அவர் கையெழுத்து போடுவாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசின் ஆய்வுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News