தமிழ்நாடு

தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2022-07-04 08:25 GMT   |   Update On 2022-07-04 08:25 GMT
  • ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இத்தகைய சாதனையை அடைந்திருக்கிறோம்.
  • தமிழ் நாடு அரசின் தொழில் துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசுவை நான் பாராட்டுகிறேன்.

சென்னை:

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளுக்கு 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ரூ.1,497 கோடி செலவில் 12 நிறுவனங்களின் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும் ரூ.22 ஆயிரத்து 252 கோடி செலவில் 21 நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எனது உரையை தொடங்குவதற்கு முன்னால் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.

14-வது இடத்தில் இருந்து இன்றைக்கு தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய ஒரு நற்சான்றிதழாக அமைந்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இத்தகைய சாதனையை அடைந்திருக்கிறோம். இதற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கடந்த காலங்களில் நம்முடைய கழக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து மிக சிறப்பாக பணியாற்றியவர் தங்கம் தென்னரசு. இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா? வேறு துறையை வழங்குவதா? என்று நான் சிந்தித்த போது திடீரென தொழில்துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.

கடந்த காலத்தில் மிக மிக தொய்வாக இருந்த இந்த துறையை மீட்டெடுப்பதற்கு ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யக்கூடிய தங்கம் தென்னரசு இருந்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்து அவரது பெயரை தேர்ந்தெடுத்தேன்.

என்னுடைய தேர்வு சரியாக இருந்தது என்பதை இப்பவும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் நாடு அரசின் தொழில் துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசுவை நான் பாராட்டுகிறேன்.

இந்த மாநாடு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு தொடங்கி உள்ளது. இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். நமது அரசு ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். சென்னையில் 2, கோவையில் 1, தூத்துக்குடியில் 1, துபாயில் 1 மாநாடும் நடந்துள்ளது.

இந்த மாநாடு 6-வது மாநாடாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்திற்குள் 6 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை.

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாக கொண்ட திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி இந்திய தொழில் அதிபர்கள் உலக நிறுவனங்கள் வரத்தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் நிதி நுட்பங்களுக்கான தொழில் திட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம். 10 நாட்களுக்கு முன்பு தான் மேம்பட்ட உற்பத்தி தொடர்பான ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாடுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக தமிழ் நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். 2-வதாக தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்க வேண்டும்.

3-வதாக உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய 'மேட்இன்' தமிழ் நாடு பொருட்கள் சென்றடையைனும். 4-வதாக மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும்.

இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து தொழில் முயற்சிகளும் இந்த 4 இலக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதன் அடையாளம் தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருகின்றன. தமிழ்நாடு அரசு மீது அபார நம்பிக்கை வைத்து தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளன.

இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ள உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். உங்கள் தொழில் திட்டங்களுக்கு தேவையான உதவிகளையும் அனுமதிகளையும், பெறுவதற்கும் உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம்.

ஆன்லைன் விற்பனை இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு மயமாக்கப்பட்ட வங்கி சேவைகளும் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன் படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியதை அரசின் கடமையாக கருதுகிறேன்.

வளர்ந்து வரும் நிதி சேவைகள், துறையின் ஆதரவோடு, உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப துறையை தமிழ்நாடு கொண்டுள்ளது. இதற்காகவே தமிழ் நாடு நிதிநுட்ப கொள்கை 2021 அறிக்கையை கோவையில் நான் வெளியிட்டேன். இன்று டெக்ஸ்பிரியன்ஸ் இணையதளத்தையும் நான் தொடங்கி வைத்துள்ளேன்.

இந்த திட்டம் மூலம் தொழில்நுட்ப சேவைகள் ஒரு குடையின் கீழ் அளிக்கப்படும். எனது கனவு திட்டமாக இருக்கக்கூடிய நான் முதல்வன் திட்டம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். தொழில் மற்றும் கல்வித்துறை இணைந்து இன்போசிஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

சென்னையில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் நிதி சேவைகள், அது தொடர்பான சேவையாக நிதிநுட்ப நகரம் செயல்படும். தமிழ் நாட்டில் உள்ள தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையில் தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில், தமிழ்நாடு நிதிநுட்ப கள விழா இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஒரு 'ஸ்மார்ட்' மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு.

நிதி நுட்ப தொழில்களை மதி நுட்பத்தோடு மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற் கட்டத்திலேயே வெற்றியும் பெற்றுள்ளோம். இன்றைய தினம் 11 நிதி நுட்ப திட்டங்களுக்கு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News