தமிழ்நாடு

ரூ.50 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்

Published On 2023-12-27 09:28 GMT   |   Update On 2023-12-27 09:28 GMT
  • கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
  • ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News