பரந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க சென்ற பி.ஆர்.பாண்டியன் கைது
- பரந்தூர் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுராந்தகம்:
சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த 2-வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பரந்தூரில் இன்று விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பாக மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடி வந்தார். அப்போது அச்சரப்பாக்கம் போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக அவரை அழைத்து சென்றனர்.