தமிழ்நாடு

சிறப்பு பிரிவினருக்கு பொறியியல் கவுன்சிலிங் நாளை தொடக்கம்

Published On 2022-08-19 09:02 GMT   |   Update On 2022-08-19 09:55 GMT
  • அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடக்கிறது.
  • அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

சென்னை:

அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பித்த 1.60 லட்சம் மாணவர்-மாணவிகளுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

காலை 10 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இரவு 7 மணிக்கு உத்தேசம் ஒதுக்கீடு வழங்கப்படும். 21-ந்தேதி காலையில் கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து 21-ந்தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் 201 மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 967, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 1,258 பேர் என மொத்தம் 2,426 பேர் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு பிரிவினருக்கு 22-ந்தேதி இரவு 7 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்வது நிறைவுபெறுகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு உத்தேச ஒதுக்கீடும், 24-ந்தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு கடிதமும் வழங்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து தொழிற்கல்வி படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்கல்வி பொது மாணவர்களுக்கும் 25-ந் தேதி தொடங்கி 27-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வும் 25-ந்தேதி காலை 10 மணிக்கு முதல் சுற்று தொடங்கி 27-ந்தேதி மாலை 5 மணிவரை நடக்கிறது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் இக்கலந்தாய்வு அக்டோபர் 23-ந்தேதி நிறைவுபெறுகிறது.

கட்ஆப் மதிப்பெண் 200-ல் இருந்து 77.5 வரை மாணவ-மாணவிகள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள். முதல் சுற்றில் 200 கட்ஆப் மதிப்பெண் தொடங்கி 184.5 வரையில் உள்ள மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது:-

25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கலந்தாய்வு மட்டுமின்றி பொதுப்பிரிவு கலந்தாய்விலும் கலந்துகொள்ள இந்த ஆண்டு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டிலும் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்படுவதால் அதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கான 'லிங்க்' மட்டுமின்றி பொதுப் பிரிவு 'லிங்க்' அனுப்பப்படும். அவர்கள் அதை பயன்படுத்தி விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு கூடுதலாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News