தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவன் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பாசம்: புதிய கூட்டணியை உருவாக்க "வியூகம்"

Published On 2023-09-27 11:56 IST   |   Update On 2023-09-27 11:56:00 IST
  • கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள் போட்டியிட்டது. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
  • 2024 தேர்தலில் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு அரசியல் களத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜனதாவை விட்டு வெளியே வந்துவிட்டதால் அடுத்த கட்டமாக தன் பக்கம் மேலும் சில கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்தும் வியூகங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.

தங்கள் கூட்டணியில் பா.ஜனதா இல்லாததால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் தங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்றுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் பா.ஜனதா இல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தயார் என்று சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

அப்போது அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி உறுதியாக இருந்ததால் திருமாவளவனின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆனால் இப்போது திருமாவளவன் சொன்னது போலவே நடந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இல்லை.

எனவே திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறது என்று அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.

இந்த திடீர் பாசம் கூட்டணி மாற்றத்துக்கு அச்சாரம் போடுவதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள் போட்டியிட்டது. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2024 தேர்தலில் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் ஒரு சீட் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி திருமாவளவனுடன் பேசியது உடல் நலத்தை விசாரிக்கத்தான். இதில் அரசியல் எதுவும் கிடையாது என்கிறார்கள்.

ஆனால் அரசியல் கட்சிகள் இப்படித்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இதே போல் காங்கிரசுக்கும் கடந்த தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை அந்த கட்சியும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையை சாதகமாக்கி காங்கிரசை இழுக்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி வகுத்து வரும் வியூகம் எந்த மாதிரி அமையும் என்பது போக போகத்தான் தெரியும்.

Tags:    

Similar News