திராவிட மாடல் இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாக செயல்படுகிறது-மு.க.ஸ்டாலின் பேச்சு
- ஈரோடு என்பது தமிழர்களாகி நமது உயிரோடு கலந்துஇருக்க கூடிய ஊர்.
- யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதி.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை சரளைப்பகுதியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.167.50 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 858 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளையும், ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
3 நாள் பயணமாகமேற்கு மண்டலத்துக்கு வந்து இருக்க கூடிய நான் இன்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளேன். ஈரோடு என்பது தமிழர்களாகி நமது உயிரோடு கலந்து இருக்க கூடிய ஊர். எனவே நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
நேற்று நான் கள்ளிப்பட்டியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தற்போது இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். பெருந்துறை என்பது பல்வேறு வரலாற்று பெருமைகளை கொண்ட ஊர். பெருந்துறை அருகே திங்களூரில் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்சங்கம் இருந்ததாக ஒரு செப்பேடு சொல்கிறது.
சேரனை சோழன் வென்ற இடம் இந்த பெருந்துறை. சிறை வைக்கப்பட்ட சேரனை மீட்க புலவர் பாடியது தான் களவழி நாற்பது என்ற நற்றமிழ் நூல். யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதி.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியில் இந்த அரசு விழா மிக பிரமாண்டமாக நமது அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
முத்துசாமி அவர்கள் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமைச்சரவையில் பணியாற்றியவர். நமது அருமை சகோதரர் முத்துசாமியை போல அமைதியாக பணியாற்ற யாராலும் முடியாது. சிலர் செய்யும் பணி அதிக பரபரப்பாக இருக்கும், ஆர்ப்பாட்டமாக இருக்கும். என்னை போல பணியாற்ற முடியுமா என்று கேட்பதை போல இருக்கும். ஆனால் சிலர் செய்யும் பணி அமைதியாக அடக்கமாக ஆர்பாட்டமில்லாமல் இருக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமானவராக முத்துசாமி விளங்கிக் கொண்டு இருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினர் அவரிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது இதே ஈரோட்டில் இதே இடத்தில் நடந்த மண்டல மாநாடு. அந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி காட்டியவர் முத்துசாமி அவர்கள். அவருடைய சீரிய முயற்சியால் இந்த அரசு விழாவும் அந்த மாநாட்டை தான் தற்போது எனக்கு நினைவு படுத்தி கொண்டு இருக்கிறது. அவ்வளவு பெரிய எழுச்சி. இதற்கு காரணமாக விளங்கக்கூடிய நமது அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும், அவருக்கு துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு செய்யப்பட்டு உள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கைய நாயக்க கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி இருக்கிறது. அந்தியூர், பர்கூர் ஊராட்சி மலை பகுதி கிராமங்களில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை, வெள்ளிதிருப்பூர் ஊராட்சியில் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. பெருந்துறை பகுதிக்கு 762 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் நாம் செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தான் இந்த பிரமாண்டமான இந்த அரசு விழா இப்போது நடைபெற்று வருகிறது.
1561 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 184 கோடி ரூபாய். 135 முடிவுற்ற பணிகளை நான் இந்த விழாவில் தொடங்கி வைத்து இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 262 கோடி ரூபாய். 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கிறது.
மூன்றும் இணைந்த முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சியில் உள்ள மடம், செல்வாறை, கெஜலப்பட்டி, கெம்பத்தாம்பாளையம் மற்றும் தேவர் மலை பகுதியில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு நபார்டு கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டத்திற்கு தொலை தூர கல்வி திட்டம் மற்றும் தொலைதூர சேவையினை இணைய தளம் வழியாக வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை, திருச்சி, தஞ்சை உள்பட 5 டெல்டா மாவட்டங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க தாளவாடி, நல்லாம்பட்டியில் 2 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். 10 கோடி மதிப்பில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். தாளவாடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்.
தமிழக அரசு அனைத்து வளர்ச்சி பணிகளையும் துரிதமாக செயல்படுத்தி வருகிறது.
அத்திகடவு அவினாசி திட்டம் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும். அதை நானே இங்கு நேரில் வந்து தொடங்கி வைப்பேன். அரசு விழா என்பது பொழுது போக்கிற்காக நடைபெறும் விழா அல்ல. அதை போன்று எங்களது பெருமையை கூறும் விழா அல்ல. மக்களுக்காக நாங்கள் என்ன செய்தோம். மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை கூறும் விழா. என்னை பற்றி புகழ் பாடும் விழா அல்ல. எனக்கு இருக்கிற புகழே போதும்.
நீ உன் அப்பா போன்று இருக்கிறாய் என்று அண்ணா கூறியதைவிட எனக்கு பெரிய புகழ் தேவையில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நான் இந்த பயணத்தை மேற்கொள்ளும் முன்பு எனக்கு 2 வெற்றி செய்திகள் கிடைத்தன. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இது மக்களை காக்கும் அரசாக மட்டும் இல்லாமல் மண்ணை காக்கும் அரசாக உள்ளது. கடந்த ஆண்டு 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 1.22 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது 18 லட்சம் டன் அதிகமாகும்.
நெல் உற்பத்தியில் பாசன பரப்பு அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதல் முதலில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது நமது அரசு தான். டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி அதிகரிப்பு தமிழ்நாட்டில் வளத்தை காட்டுகிறது.
இன்னொரு முக்கிய வெற்றி செய்தி என்னவென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவந்தது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இந்த அரசு சமூக நீதியை பாதுகாக்கும் அரசாக உள்ளது.
திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது.
மாநில சுயாட்சி அதிகாரம் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. நமது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். நான் உங்களில் ஒருவனா உழைத்துக் கொண்டு இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். உங்கள் அன்போடும் ஆதரவோடும் இலக்கை நோக்கி செல்வேன். உங்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.