தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை

Published On 2024-01-28 07:14 GMT   |   Update On 2024-01-28 07:14 GMT
  • அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
  • சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

சேலம்:

பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் ஆலோசனை நடத்திய அவர் இரவில் சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே. செல்வம், மாதேஸ்வரன், சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News