தமிழ்நாடு

பெரியபாளையம் அருகே கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குண்டை செயல் இழக்க வைக்க முடிவு

Published On 2022-12-04 07:36 GMT   |   Update On 2022-12-04 08:43 GMT
  • பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
  • திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயல் இழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? எப்படி இங்கு வந்தது? இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக செய்தனர்.

இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறிவிட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு பத்திரமாக கொண்டு சென்றனர்.அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயல் இழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

Similar News