தமிழ்நாடு செய்திகள்

வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு நடைமேம்பாலம் அமைக்க பரிசீலனை

Published On 2022-09-10 13:56 IST   |   Update On 2022-09-10 13:57:00 IST
  • சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
  • வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் மற்றும் கூடுதல் பிளாட்பாரம் கட்ட 9 மாதங்கள் ஆகும்.

சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. இதையடுத்து வருகிற டிசம்பர் மாத இறுதியில் இந்த புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ்நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும் இங்கு மாநகர பஸ்கள் வந்து செல்லவும் தனியாக பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து பஸ்நிலையத்துக்கு செல்ல மாநகர பஸ்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை வண்டலூர் ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.

டிசம்பர் மாத இறுதியில் பஸ் நிலையத்தை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ரெயில் நிலையத்துடன் இணைக்க பல்வேறு மாற்று வழிகளையும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோ ரெயிலை நீட்டிக்கும் திட்டமும் உள்ளது.

ஆனால் இந்த மெட்ரோ ரெயில் விரிவாக்கம் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவேற வாய்ப்பு இல்லை. மேலும் இந்த நீட்டிப்பு நிதி பிரச்சினை காரணமாக 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இதனால் இந்த திட்டம் தாமதமாகிறது.

மேலும் மாதவரம்-சிறுசேரி இடையே 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அதை கேளம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை இணைக்கும் சாத்தியக் கூறுகளையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.

கிளாம்பாக்கம் அடுத்த போக்குவரத்து மையமாக மாறும் நிலையில் அதனுடன் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் இணைக்கப்படுகிறது. இதற்கிடையே வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு நடை மேம்பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை இந்திய ரெயில்வேயும் ஆய்வு செய்து வருகிறது.

வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் மற்றும் கூடுதல் பிளாட்பாரம் கட்ட 9 மாதங்கள் ஆகும். மேலும் இந்த பிளாட்பாரம் புறநகர் மின்சார ரெயில்களில் வந்து செல்ல மட்டுமே பயன்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News