மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
- வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.
சென்னை:
முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
வி.பி.சிங் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கிருந்த உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய்சிங், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு கலைவாணர் அரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நானும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் 2 முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு 1988-ம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
அப்போது இளைஞரணி சார்பில் மாபெரும் ஊர்வலத்தை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற அந்த ஊர்வலத்தை இதே அண்ணா சாலையில் காயிதே மில்லத் கல்லூரி பக்கத்தில் மேடை அமைத்து மாலையில் தொடங்கி இரவு வரை வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங்.
அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு அவர் பிரதமர் ஆன போது டெல்லிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் குழுவில் நானும் இருந்தேன். அப்போது என்னை அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்போது வி.பி.சிங் என்னிடம் இவரை எப்படி மறக்க முடியும்? இவர்தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார் என்று மறக்காமல் என்னை பாராட்டினார். அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு.
இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்து வைத்துள்ளேன் என்றால் இதைவிட என்ன பெருமை வேண்டும்?
இந்தியா முழுவதும் பரவி உள்ள சமூக நீதி குடும்பத்தை சார்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதின் மூலம் அவரது புகழ் உயருது. நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி உள்ளோம்.
காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசு தனது கடமையாக கருதுகிறது.
சமூக நீதியை காக்கிற கடமையில் இருந்து இம்மி அளவும் வழுவாமல் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
வி.பி.சிங் பற்றியும் அவரது தியாக வாழ்வு பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தவர். தன்னுடைய நிலங்களை தானமாக வழங்கியவர்.
வி.பி.சிங் பிரதமராக பதவியில் இருந்தது 11 மாதம்தான். ஆனாலும் அவர் செய்த சாதனை மகத்தானது.
அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. அதை வழங்குவதற்காக 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் வி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்.
சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அழைக்கப்படும் சமூகத்துக்கு மத்திய அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற வி.பி.மண்டல் பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர்தான் வி.பி.சிங்.
வி.பி.சிங் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல. ஏன் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவரும் கிடையாது. ஆனாலும் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டினார்.
வி.பி.சிங் சிலையை திறந்ததின் மூலம் நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
வி.பி.சிங்கின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வி.பி.சிங் முயற்சியால் தான் இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரடியாவது முன்னேறி இருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும்.
நமக்கான உரிமைகள் இன்றைக்கும் முழுமையாக கிடைக்காத கிடைக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது.
சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை கிடையாது. எல்லா மாநிலங்களிலும் உள்ள பிரச்சனை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜாதி வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சனை ஒன்றுதான்.
அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறியடிக்கிற மருந்தாக இருப்பது தான் சமூக நீதி. அந்த சமூகநீதி தளைக்க வேண்டுமானால் அதை முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய செய்திகளை சொல்கிறேன்.
தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை, அந்த கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
இதை அகில இந்திய அளவில் சமூக நீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நன்மைக்காக செயல்பட வேண்டும்.
சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி.
இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான அரசியல் செயல் திட்டங்களை அரசியல் செயல் திட்டங்களாக மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.