திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி 4 பேர் பலி
- தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
வேங்கிக்கால்:
ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.