தமிழ்நாடு

படகு போக்குவரத்து இன்னும் சில நாட்கள் நீடிக்கும்- கலெக்டரும் படகில் சென்று ஆய்வு

Published On 2023-12-08 05:36 GMT   |   Update On 2023-12-08 07:27 GMT
  • மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
  • மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

புயல் மழை காரணமாக தாம்பரம் வரதராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலை, வெளிவட்டச் சாலையில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை ஆகியவற்றின் இடையேயான பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

இதையடுத்து இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதில் ஏறி பலர் வெளியேறி தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் செல்கிறார்கள்.

சி.டி.ஓ. காலனி, வசந்தம் நகர், ராயப்ப நகர், அஞ்சுகம் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் அந்த பகுதிகளுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் அந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.


இதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் முழுமையாக வெளியேற இன்னும் சில நாட்கள் ஆகும். இதனால் அந்த பகுதியில் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் இன்னும் சில நாட்கள் படகு போக்குவரத்தும் நீடிக்க உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

தாம்பரம் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மழை ஓய்ந்த பிறகும் உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறோம். மின்சாரமும் இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் மருந்து மாத்திரை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏராளமான மக்கள் இன்னும் மொட்டை மாடிகளிலேயே உள்ளனர்.

இங்குள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இந்த பகுதியில் இருந்து வெளியே செல்ல நினைப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News