தி.மு.க. அமைச்சருடன் பா.ஜ.க. ரகசிய பேச்சு- திரைமறைவு சதி நடப்பதாக தகவல்
- செந்தில் பாலாஜி மட்டுமின்றி தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரையும் பாரதிய ஜனதா பக்கம் இழுப்பதற்காக தூது விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களை அசைத்து பார்க்க திரை மறைவு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சென்னை:
அ.தி.மு.க. 3 ஆக பிரிந்து கிடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இப்போதைக்கு தி.மு.க.தான் பெரிய கட்சியாக உள்ளது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியையும் பாரதிய ஜனதா கட்சியையும் நேரடியாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். மதவாத பி.ஜே.பி. என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் தி.மு.க. ஆட்சியை அசைத்துப் பார்க்க பாரதிய ஜனதா மேலிடம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக தி.மு.க.வில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் சட்ட விரோத பணபரிவர்த்தனை செய்தவர்கள் யார்-யார் உள்ளனர் என்ற பட்டியலை எடுத்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போது அவரும், அவரது தம்பி அசோக் குடும்பமும் என்னென்ன பணபரிவர்த்தனை செய்து உள்ளனர் என்ற பட்டியலை அமலாக்கத்துறையினர் சேகரித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆனாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அது பற்றி இன்னும் விசாரணை நடத்தவில்லை. இப்போது நடக்கும் விசாரணை அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர்-கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் வழங்காமல் பண மோசடி செய்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் இன்னும் அவரை அமலாக்கத்துறையினர் விசாரிக்காமல் உள்ளனர்.
ஆனாலும் அமலாக்கத்துறையினர் இன்னும் 3 மாதம் கழித்து பொறுமையாக இருந்து டெல்லிக்கு அவரை கொண்டு சென்று விசாரிப்பார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.
2 ஆண்டு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கையாண்ட விதம் குறித்து பல்வேறு விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
செந்தில் பாலாஜி மட்டுமின்றி தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரையும் பாரதிய ஜனதா பக்கம் இழுப்பதற்காக தூது விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த அமைச்சர் மீதுள்ள வழக்குகளை வைத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முயற்சி எடுக்கப்பட்டதாகவும் இதற்காக அவருடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அந்த அமைச்சர் பிடி கொடுக்காமல் நழுவி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இப்படி தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களை அசைத்து பார்க்க திரை மறைவு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
எல்லா மாநிலத்திலும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை 'ரெய்டு' மூலம் மிரட்டி தங்கள் பக்கம் இழுக்கும் பார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த முடியுமா? என்று பி.ஜே.பி. முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.