அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- கும்பல் வெறிச்செயல்
- பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார்.
- அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது. செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து சிதறி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிராங்கிளின் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிராங்கிளின் அரக்கோணம் ஏ.வி.எம். சர்ச் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தார்.
தற்போது பெரியம்மா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.