நாமக்கல்லில் இன்று மாலை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம்
- நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
- ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் அண்ணாமலை பேச உள்ளார்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
இன்று (சனிக்கிழமை) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மதியம் 2 மணி அளவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள எல்.எம்.ஆர். தியேட்டர் அருகே நடைபயணத்தை தொடங்குகிறார்.
பின்னர் சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோவில், சிங்கப்பூர் பிளாசா மற்றும் மணிக்கூண்டு வழியாக பரமத்தி சாலையில் தில்லைபுரம் வரை நடந்து செல்ல உள்ளார்.
பின்னர் அங்கு மாலை 6 மணி அளவில் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்களான சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் வி.பி.துரைசாமி, ரத யாத்திரையின் மாநில பொறுப்பாளர் நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் டாக்டர் ஷியாம் சுந்தர், லோகேந்திரன், மாநில மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
அதன் பிறகு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சேந்தமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் மாலையில் ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச உள்ளார். இதையொட்டி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.