தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது- விவசாயிகள் கவலை

Published On 2022-08-14 07:12 GMT   |   Update On 2022-08-14 07:12 GMT
  • புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
  • கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகம் பயன்பெறுகின்றனர்.

திருத்தணி:

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 புதிய அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்து நிதி ஓதுக்கி உள்ளது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய அணையால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது என்ற வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். இந்த புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து கொசஸ்தலை ஆறு உருவாகி நகரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, சிவாடா, ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரியில் சென்று கலக்கிறது.

இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகம் பயன்பெறுகின்றனர். பல பகுதியில் இந்த தண்ணீர் குடிநீராகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் அணை கட்டி கொசஸ்தலை ஆற்றுக்கு வர வேண்டிய பெருவாரியான தண்ணீரை தடுத்து தேக்கி உள்ளது. இந்த நிலையில் ஆந்திர அரசின் தற்போதைய முடிவின்படி கொசஸ்தலை ஆற்றில் 2 இடங்களில் புதிய அணை கட்ட முடிவு செய்து இதற்காக ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அணைகள் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட் நகரம் தாலுகாவில், கத்திரிபள்ளி பகுதியில், ரூ.97 கோடி மதிப்பில் 540 ஏக்கர் பரப்பிலும், நகரி அடுத்த, புக்க அக்ரஹாரம் அருகே, ரூ.72 கோடி மதிப்பில், 420 ஏக்கர் பரப்பிலும் அணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய அணைகளால் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்று ஆந்திர மாநில நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த அணைகள் கட்டும் பணிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் டெண்டர்கள் பெறப்படும் என்றுதெரிகிறது. இது திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

இது தொடர்பாக பள்ளிப்பட்டை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கொசஸ்தலை ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட அணை, மற்றும் தற்போது கட்டப்பட உள்ள 2 அணைகள் என்று 3 அணைகளால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் வராமல் தடுத்து நிறுத்தப்படும். இதனால் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை நம்பிஇருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதேபோல் சென்னை மக்களுக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கொசஸ்தலை ஆற்று தண்ணீர் பூண்டி ஏரிக்கும் செல்லும். புதிய அணைகளால் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வருவது தடைபட்டு சென்னையும் பாதிக்கப்படும்.

கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாயும் நிலையில் அங்கு புதிதாக 2 அணைகள் கட்டுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசின் புதிய அணை கட்டப்படும் அறிவிப்பால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Similar News