தமிழ்நாடு செய்திகள்

கொள்ளிடத்தில் திறக்கப்பட உள்ள மணல் குழிகளை மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2023-05-06 13:12 IST   |   Update On 2023-05-06 13:12:00 IST
  • மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
  • கடலூர்-மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலை ஒட்டிய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. அவற்றில் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு மணல் குழிகள் திறக்கப்படுவதும், அதில் எல்லையில்லாத அளவுக்கு மணல் அள்ளப்படுவதும் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் சரி செய்யவே முடியாத அளவுக்கு கேட்டை ஏற்படுத்தி விடும்.

கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் நீர்வளத்தைப் பெருக்க 10 கிமீக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்யாத அரசு, அதற்கு நேர் எதிராக 7.90 கிமீக்கு ஒரு மணல் குழியை அமைக்கிறது. இது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல்.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் நடத்தப்பட்டு வரும் மணல் கொள்ளையால் அளக்குடியில் தொடங்கி 22 கி.மீ தொலைவுக்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மணல் குழிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு மணல் அள்ளப்படும். இது கொள்ளிடத்தை கொள்ளையடிக்கும் செயலாகும்.

மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடலூர்-மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலை ஒட்டிய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதன் பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசே நினைத்தாலும் தடுக்க முடியாது.

மணலுக்கான மாற்று வழிகளை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News