என்.எல்.சி. போராட்ட வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 20 பா.ம.க.வினரை அன்புமணி சந்தித்தார்
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
- பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
நெல்லை:
என்.எல்.சி. நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளான கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, அதற்கான இடத்தை என்எல்சி நிறுவனம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இப்பணியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பெரும்பாலானோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
தகவல் அறிந்து அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.