தமிழ்நாடு

சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published On 2023-01-11 06:54 GMT   |   Update On 2023-01-11 09:28 GMT
  • சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் அவையில் இருந்து வெளியேறியவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தி.மு.க.வினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

தவறு செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியபிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. சாமான்ய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் வருகிறது.

கஞ்சா, கோகைன், பவுடர் உள்ளிட்ட பல்வேறு வடிவத்தில் போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கருத்தை சட்டசபையில் வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தோம்.

இளைஞர்களின் எதிர்காலம் சீரழியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கருத்தை பதிவு செய்ய வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News