தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய 90 ஆயிரம் பேர் முன்பதிவு

Published On 2023-11-02 07:18 GMT   |   Update On 2023-11-02 08:09 GMT
  • தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை.
  • கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.

சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந்தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.

முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந்தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.

Tags:    

Similar News