பாவூர்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் 85 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை
- நேசமணி பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த சுமார் 85 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தது. இதுதொடர்பாக அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
- சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுதந்திராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரை சேர்ந்தவர் நேசமணி(வயது 60). இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உஷா பாப்பா. இவர் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூரில் வசிக்கும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இன்று அதிகாலை பாவூர்சத்திரத்தை அடுத்த குருசாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக நேசமணி புறப்பட்டார். அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் தேவாலயத்திற்கு புறப்பட்டதும், கதவை பூட்டிவிட்டு நேசமணியும் தேவாலயத்திற்கு சென்றார். அவர்கள் அனைவரும் ஆராதனை முடிந்தபின்னர் வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
அதிர்ச்சி அடைந்த நேசமணி பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த சுமார் 85 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தது. இதுதொடர்பாக அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுதந்திராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.