தமிழ்நாடு

ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்காக ஊசி போட்ட 5 வயது சிறுவன் மரணம்

Published On 2022-11-07 05:20 GMT   |   Update On 2022-11-07 05:20 GMT
  • சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர்.
  • பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மகேசுவரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்த தம்பதியினருக்கு யூவஸ்ரீ என்ற 10 வயது மகளும், கவிதேவநாதன் என்ற 5 வயது மகனும் உள்ளனர் .

மகேசுவரனின் மனைவி கற்பகவள்ளி உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 2 குழந்தைகளையும் மகேசுவரனின் தாயார் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை அறிந்து அவரிடம் ஊசி போட சென்றுள்ளனர். அங்கு சிறுவன் கவி தேவநாதனுக்கு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தான்.

உடனடியாக அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ப்ரீத்தி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின் உறவினர்களிடம் சமாதானம் செய்து உடலை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவனை இழந்த குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News