காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை மடக்கி 5 கிலோ தங்கம் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
- காரிமங்கலம் அருகே பெங்களூரில் இருந்து 5 கிலோ நகையுடன் வந்த காரை மர்ம நபர்கள் கடத்திக் கொண்டு சென்றனர்.
- சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரும்பு ராடு, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்:
கோவை ராஜ வீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நகைக்கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் வந்தனர்.
பிரசன்னா ஓட்டி வந்த கார் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் மீது சென்றது. அப்போது பின்னால் 2 கார்களில் வந்த மர்மநபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரின் சைடு கண்ணாடிகளை இரும்பு ராடால் உடைத்து நொறுக்கினர்.
இதனால் காருக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த பிரசன்னா, விஜயகுமார், சுரேஷ்குமார், ஜெய்சன் ஆகியோர் பதறிப்போய் வண்டியில் இருந்து கீழே இறங்கினர். அப்போது மர்ம நபர்கள் 5 கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த காரையும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பிரசன்னா புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து நகையை பறிக்கொடுத்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரும்பு ராடு, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை சாவடிகளில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து பிரசன்னா வந்த கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.