தமிழ்நாடு

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 ஆயிரம் அரசு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது

Published On 2023-09-15 04:52 GMT   |   Update On 2023-09-15 05:40 GMT
  • சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
  • முன்பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் 850 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன.

சென்னை:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை 18-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளாகும். அதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லக்கூடியவர்கள் இன்றே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து பல்வேறு தொழில், கூலி வேலை செய்து வரும் மக்கள், அரசு பணியாளர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்கின்றனர். சென்னையில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய அரசு பஸ்கள் மட்டும் இருப்பதால் அதில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். நேற்று வரை தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று மேலும் கூடுதலாக 5000 பேர் முன்பதிவு செய்தனர்.

சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் 850 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் 2100 அரசு பஸ்களுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இன்று இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் முன்கூட்டியே வந்தால் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய முடியும். நள்ளிரவில் வந்து கும்பலாக குவியும்போது பஸ்களை இயக்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதால் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்டால் பொது மக்களுக்கு உதவி செய்வது பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News