தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி அருகே திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற கிராம மக்கள்

Published On 2022-08-09 07:18 GMT   |   Update On 2022-08-09 07:18 GMT
  • கும்மிடிப்பூண்டிைய அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லியை சேர்ந்தவர் வடுவம்மாள்.
  • வடமாநில கொள்ளையன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டிைய அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லியை சேர்ந்தவர் வடுவம்மாள் (வயது 80).இவருடன் மகள்கள் செல்லம்மாள், சாந்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

நேற்று இரவு அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் தூங்கினர். மூதாட்டி வடுவம்மாள் விட்டில் உள்ள முன்பக்க அறையில் தனியாக தூங்கினார். அவரது மகள்கள் உள்பக்க அறையில் இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் 3 வாலிபர்கள் திடீரென வடுவம்மாளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சத்தம்கேட்டு எழுந்த வடுவம்மாள் கொள்ளையர்கள் வீட்டுக்குள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மூதாட்டி வடுவம்மாளை சரமாரியாக தாக்கி கிழே தள்ளிவிட்டு அறைக்குள் புகுந்து நகை-பணத்தை தேடினர். இதற்குள் சத்தம்கேட்டு எழுந்த செல்லம்மாள், சாந்தி ஆகியோரும் கொள்ளையர்கள் வீட்டுக்குள் நிற்பதை கண்டு கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கொள்ளையர்கள் 3பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை கிராம மக்கள் விரட்டிச் சென்றனர்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் அங்குள்ள பள்ளத்தில் விழுந்தான். அவனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடிகொடுத்தனர். அவனது கூட்டாளிகள் மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையனை சரமாரியாக தாக்கியதில் அவன் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினான். தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தாக்குதலில் காயம் அடைந்த கொள்ளையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. கொலையுண்ட கொள்ளையன் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. அவனுடன் வந்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பலர் அப்பகுதியிலேயே வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வடமாநிலங்களில் இருந்து தப்பி வரும் நபர்கள் இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி கைவரிசை காட்டி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அவர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். தொழிற்சாலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரம் இல்லாமல் உள்ளது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடும் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீடுபுகுந்து திருட முயன்ற வடமாநில கொள்ளையன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News