தமிழ்நாடு

(கோப்பு படம்)

மின் கட்டண உயர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

Published On 2022-09-15 01:00 GMT   |   Update On 2022-09-15 01:35 GMT
  • மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
  • இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News