தமிழ்நாடு செய்திகள்

கண்காணிப்பு கேமரா

அய்யனார் கோவில் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2022-09-02 12:55 IST   |   Update On 2022-09-02 12:55:00 IST
  • ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோவில் இருக்கிறது.
  • கேமராக்கள் மட்டுமின்றி அதில் இருந்த 18 மெமரி கார்டுகள், பேட்டரி உள்ளிட்டவைகளையும் திருடி உள்ளனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆற்றில் மழை நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

அங்குள்ள அருவி மற்றும் ஆற்றில் ராஜபாளையம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் நீராட வருகிறார்கள். இந்த பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எப்போதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

மேலும் இந்த வனப்பகுதியில் புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருக்கும். அதனை கண்காணிப்பதற்காக வனப்பகுதியில் பல இடங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பதிவாகி உள்ள காட்சிகளை தினமும் வனத்துறையினர் ஆய்வு செய்வது வழக்கம். அதேபோல் பார்ப்பதற்காக வன காப்பாளர் சபரி கிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சென்றனர். அப்போது நீராவி பீட் பகுதியில் மரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை காணவில்லை.

அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கேமராக்கள் மட்டுமின்றி அதில் இருந்த 18 மெமரி கார்டுகள், பேட்டரி உள்ளிட்டவைகளையும் திருடி உள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் வன காப்பாளர் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமராக்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News