தமிழ்நாடு

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை நீடிப்பு

Published On 2024-04-16 05:28 GMT   |   Update On 2024-04-16 05:28 GMT
  • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News