தமிழ்நாடு

வெயில் கொடுமைக்கு சிறுவன் உள்பட 2 பேர் பலி

Published On 2024-04-12 06:19 GMT   |   Update On 2024-04-12 06:19 GMT
  • படிப்பாதை வழியாக அடிவாரம் வந்தபோது நேச லிங்கத்தின் 8 வயது மகன் விஸ்வாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையத்தைச் சேர்ந்த நேசலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து விட்டு படிப்பாதை வழியாக அடிவாரம் வந்தபோது நேச லிங்கத்தின் 8 வயது மகன் விஸ்வாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டான். கடுமையான வெயில் காரணமாக மயக்கமடைந்து உயிரிழந்திருக்கலாம் என பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

வேடசந்தூர் ஆத்துமேட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்குள்ள நிழற்குடையில் தங்கி இருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று மாலை கடும் வெயில் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என தெரிய வரவே அவரது உறவினர்களை வரவழைத்து போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News