தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை-நினைவு மண்டபம்: சசிகலா தலைமையில் இன்று பூமி பூஜை

Published On 2024-01-19 07:55 GMT   |   Update On 2024-01-19 07:55 GMT
  • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
  • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

கோத்தகிரி:

தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

Tags:    

Similar News