தமிழ்நாடு

தேங்கி நிற்கும் மழைநீர்: தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-12-06 07:09 GMT   |   Update On 2023-12-06 07:09 GMT
  • மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
  • மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிச்சாங் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News