சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.50 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் கும்பல் கைது
- வெங்கடேஷ் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.
- நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடாசல கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ் (37). இவர் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் புழக்கத்தில் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் புதிய வரிசை எண் கொண்ட கரண்சி நோட்டுகளாக ரூ.60 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 50 லட்சத்துடன் ராஜேஷ் கூறியபடி சேலம் மாரமங்கலத்துப்பட்டிக்கு வந்து உள்ளார். அப்போது அவரிடம் நூதனமாக பணத்தை பறித்து கொண்ட கும்பல் வெங்கடேசிடம் சற்று நேரத்தில் வந்து பணத்தை தருவதாக கூறி ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.
நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி தெரியவந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் கவுதம் கோயல், மதிவாணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் ராமமூர்த்தி, ஆனந்தி உள்பட இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் மோகன் பாரதி (26), காங்கேயம் அருகே உள்ள சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பிரகதீஷ்வரன் (24), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் வினித் குமார் (27), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சின்னசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜன் என்பவரது மகன் முத்துமாரி (30), சிவகாசி அருகே உள்ள திருத்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் (58), ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிரையனூர் பகுதியை சேர்ந்த குமார் (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களுரு, மைசூருவில் தேடி வருகிறார்கள்.