தமிழ்நாடு
மோட்டை அணை நிரம்பி வழியும் காட்சி.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது

Published On 2022-11-16 04:44 GMT   |   Update On 2022-11-16 04:44 GMT
  • 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 89.20 அடியாக உள்ளது.
  • குண்டாறு அணை நிரம்பி விட்ட நிலையில் செங்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டை அணையும் இன்று நிரம்பியது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணையான பாபநசாம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 89.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1658 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 768 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. சேர்வலாறு அணை பகுதியில் தொடர்மழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 90 அடியாக இருந்த நிலையில் நேற்று 3 அடி உயர்ந்து 93 அடியானது. தொடர்மழையால் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 99.08 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 100 அடியை நெருங்கி உள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.10 அடி நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக ஆய்குடியில் 8.8 சென்டிமீட்டர் மழை பெய்தது.

மாவட்டத்தில் உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை நிரம்பி விட்ட நிலையில் செங்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டை அணையும் இன்று நிரம்பியது.

சுமார் 27 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை மூலம் 22 குளங்களில் தண்ணீர் வரப்பெற்று 366 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். மேலும் காடுவெட்டி, தவனை, ஊரபத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 100 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அணை நிரம்பி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News