தமிழ்நாடு

சாந்தன் உயிரிழப்பு: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதி 3-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2024-03-01 04:23 GMT   |   Update On 2024-03-01 04:23 GMT
  • முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
  • குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.

திருச்சி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.

அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.

இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்

இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News