நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
- அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது.
- மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பாளை, நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 4.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 2.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாங்குநேரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.41 கனஅடியாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 62.90 அடியாகவும், சேர்வலாறு அணை 77.49 அடியாகவும் உள்ளது. இந்த அணை பகுதிகளில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று பெரும்பாலான இடங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
புதியம்புத்தூர் பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நிலங்களை குளிர வைத்ததாக கூறினர். பாஞ்சாலங்குறிச்சி, பசுவந்தனை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. எட்டயபுரம், விளாத்திகுளம், சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. விளாத்திகுளத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
மேலும் வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம், கீழ அரசடி, ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூர், கடம்பூர், பசுவந்தனை, கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசியில் நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. செங்கோட்டையில் 4 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 34.25 அடியாக உள்ளது.
கருப்பாநதி அணையில் 7.5 மில்லி மீட்டரும், அடவிநயினாரில் 6 மில்லிமீட்டரும், கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 1 அடி அதிகரித்து 93 அடியானது. ராமநதியில் 55.50 அடியும், கருப்பாநதியில் 32.81 அடியும் நீர் இருப்பு உள்ளது.