தமிழ்நாடு செய்திகள்

நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுமா?: பயணிகள் கோரிக்கை

Published On 2023-01-20 11:16 IST   |   Update On 2023-01-20 11:16:00 IST
  • ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் சிறப்பு ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழித்தட மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.
  • சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்பட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தென்காசி:

தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சிறப்பு ரெயில்களில் மக்கள் மிகவும் ஆர்வமாக பயணிக்கின்றனர்.

இந்த ரெயில் பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் சிறப்பு ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழித்தட மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கடையத்தில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு கணிசமான பயணிகள் பயணித்தனர்.

இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்பட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரெயில்கள் மூலமாக 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் தென்னக ரெயில்வேக்கு கிடைத்துள்ளது.

எனவே வருமானம் கொழிக்கும் நெல்லை-தாம்பரம், நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயிலாக இயக்கும் வரை சிறப்பு ரெயில்களாக தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் 2 ரெயில்களை பயன்படுத்தி இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால் தென்னக ரெயில்வேக்கு இந்த சிறப்பு ரெயில்களை நீட்டிப்பது எளிது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பண்டிகை விடுமுறைகளை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் தென்காசி வழியாக தாம்பரத்திற்கும், வியாழக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்துக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இரு மார்க்கங்களிலும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு இந்த தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் இரு சிறப்பு ரெயில்கள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதால் நிரந்தரமாக்க வேண்டும்.

மேலும் மதுரை ரெயில்வே கோட்டத்தில் சென்னைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை, பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News